செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (12:03 IST)

ரிஷபம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்

கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  புதன்,  செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில்   குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்: கவர்ச்சிகாரகன் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இருந்து  கொண்டேயிருக்கும் என்னும் அளவுக்கு உறவினர்களை விட நண்பர்கள் வட்டம் உங்களுக்குப் பெரிதாயிருக்கும். இந்த மாதம் சிலருக்கு புதிய  வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த  வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப்  பலப்படுத்தும். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும்.
 
குடும்பச் சூழலில் இன்பகரமான மாற்றங்களைக் காண்பீர்கள். உடலாரோக்யமும் சிறப்பாகவே தொடரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான  திருப்பங்கள் உண்டாகும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களை  அனுசரித்து நடந்து கொள்வார்கள். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியமும்  கிடைக்கும்.
 
தொழிலில் வியாபாரிகளுக்கு முழுமனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபார  ஸ்தலத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் உங்கள் கவனம்  இருக்க வேண்டும். 
 
உத்தியோகஸ்தர்களுக்கு:உங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள்,  பதவி உயர்வுகள் போன்றவற்றை எளிதாகப் பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும்  கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். 
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய  அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்ககூடும். புதிய  ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. 
 
அரசியல்வாதிகளுக்கு உங்கள் தன்னலமற்ற  உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும்  பெறுவீர்கள்.  உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும்.  இதன் காரணமாக  உங்கள்  பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும். 
 
பெண்களுக்கு வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும்.  சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும்  வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  
 
மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற துறைகளிலும் நீங்கள் உங்கள் திறமைகளை  வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.  சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை  உண்டு.  
 
கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்: இந்த மாதம் புதிய, சொத்துகள் அமையும் வாய்ப்பு உருவாகும்.  குடும்பத்தினரின் தேவைகளை நல்ல  முறையில் நிறைவேற்றி அவர்களைத் திருப்தி படுத்துவீர்கள்.  நல்லவர்களின் அறிமுகமும்,  நட்பும் கிடைப்பதன் மூலம் உங்களுக்கு  நன்மைகள் நடக்கும்.  மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.  சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையக்கூடும்.  கோபத்தைக்  கட்டுபடுத்துவதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது நிதானமாக இருந்து வருவதும் அவசியம்.  
 
ரோகிணி: இந்த மாதம் எதிலும் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் தாமதமின்றி முழுமையான வெற்றியைப் பெற முடியும்.  குழப்பத்துக்கு  இடங்கொடுக்காதீர்கள்.  அரசு வழியில் சிலர் நன்மைகளைப் பெற்று மகிழ வாய்ப்பு உண்டு. மனைவியின் பெயரில் அசையாச் சொத்துகளைச்  சிலர் வாங்க முற்படுவீர்களாயினும் ஆவணங்களைச் சரியாகப் பரிசோதனைச் செய்து,  வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளையும்  பெற்ற பின்னர் வாங்குவது நன்மை தரும். 
 
மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்: இந்த மாதம் சகோதர வழியில் செலவு உண்டு.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய சந்தர்ப்பம்  கைகூடி வரும்.  இதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடும்.  நண்பர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையிலேயே இருந்து  வரும்.  கடிதத் தொடர்புகளால் களிப்பு தரும் செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு.  பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழக்கூடிய  நிலை உருவாகும்.  மணமான பெண்கலில் சிலர் மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்சனை நீங்கும்.  உறவினர் மற்றூம் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை  தினமும் 9 முறை சொல்லவும். 
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 22, 23.